அன்பார்ந்த வாசகர்களுக்கு முதலில் எனது மன்னிப்பைக் கோரிக்கொள்கிறேன். இதழ் வெகுவாக காலதாமதமாகிவிட்டது. கடந்த இதழில் குறிப்பிட்டது போல் ஏற்பட்ட வறட்சி சூழ்நிலை மற்றும் போர்ஹேஸ் சிறப்பிதழ் தயாரிப்பதில் எற்பட்ட கால தாமதம் காரணமாக இந்நிலை ஏற்பட்டு விட்டது. முதல் இதழுக்கு வாசகர்கள் தந்த ஓரளவு ஆதரவையும் பெருமிதமாகக் கொண்டு இதழை முனைப்பாக தயாரிக்கும் முயற்சியல் ஈடுபட்டேன். எனினும் சில நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் மன ரீதியாக எதிர்மறை உற்சாகத்தை அளித்து பேருதவி புரிந்தனர். இன்றைய சூழலில் ஒரு சிற்றிதழ் நடத்துவது என்பது எத்தகைய சங்கடங்களை ஏற்படுத்தும் என்று அறியாதவன் நான் அல்ல. சென்ற இதழுக்கு தன்முனைப்புடன் சில விளம்பர உதவிகளை தந்த நண்பர்களும் இதழின் போக்கைக் கண்டு அன்புடன் வாபஸ் பெற்றுகொண்டனர். இருப்பினும் அதுவே நமது முதல் வெற்றி. கார்ப்ரேட்களைக் காட்டிலும் அதன் அடிவருடிகள் மிக சிரத்தையுடன் தங்கள் பணிகளை மேற்கொள்கிறார்கள்.
இவைகளைக் கூட தாங்கிக் கொள்ளலாம். பன்றிக்காய்ச்சல்தான் பெரும் தொல்லையாக இருக்கிறது. அது உயிரை மெய்யாகவே பாதிக்கிறது. தமிழில் சிறுபத்திரிக்கைக்கான வெற்றிடத்தை உணர்ந்துதான் இதழை நடத்த முனைந்து செயலாற்றி வருகிறோம். வாசகர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கும்படி சென்ற இதழிலிலேயே குறிப்பிட்டிருந்தேன். அதேபோல் இதழின் அரசியலுக்கேற்ப படைப்பாக்கங்களை கோரியிருந்தேன். எந்தவிதப் பயனும் இல்லை. சுற்றுச்சூழல் குறித்து தீவிரமாக பேசப்பட்டு வரும் இந்நாட்களில் நாம் ஏன் காகிதத்தை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணமும் கூட ஏற்பட்டது. இருப்பினும் சில நிறுவனங்களின் புத்தக வெளியீட்டிற்கு, பெரும் அரசியல் தனவான்களும், திரைப்பட மேதமைகளும் திரண்டு வந்து மேடையேறி ஆதரவளித்ததைக் கண்டு நாங்களும் உற்சாகம் அடைந்து மனதை மாற்றிகொண்டு இதழை நடத்த ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் இறங்கினோம். பல லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவளித்து காகிதங்களை வீணடிப்பதைக் காட்டிலும் சொற்பமாக சில ஆயிரங்கள் மட்டும் செலவழிப்பதால் எந்த தீங்கும் நேர்ந்து விடாது. இவ்விதழ் இரட்டை இதழாக மலர்ந்துள்ளது. சென்ற இதழின் தொடர்ச்சியாக இரண்டு ஃபிரஞ்ச் மொழி சிறுகதைகளின் மொழியாக்கங்களும், புதிய பகுதியாக குறும் படப்பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.
இனி அடுத்த இதழில் புத்தக விமர்சனப்பகுதியும் புதிதாக சேர்க்க எண்ணியுள்ளோம். புத்தகங்கள் வரவேற்கப் படுகின்றன.
தமிழ் இலக்கிய சூழலில் போர்ஹேஸ் வெகுவாக பேசப்பட்டு விட்டார். இனி என்ன உள்ளது என்று வாசிப்போர் கேட்கக்கூடும். போர்ஹேஸ் குறித்து முழுமையாக இதுவரை தமிழில் பேசப்பட வில்லை என்பதே எனது வாதம். அவரைப் பற்றி வெளிவந்துள்ள விஷயங்கள் அனைத்தும் வெறும் ஆரம்ப அரிச்சுவடிகளே. அவரைப்பற்றிய விரிவான வாசிப்பின் தொடக்கமே எங்களது பணி.
அடுத்த இதழ் வரும் போது தமிழ் இலக்கியம் சுபிக்ஷம் பெற்றுவிடும், நமது தானைத் தலைவர் நடத்தும் செம்மொழி மாநாட்டினால் அப்பயன் கிட்டி விடும். இனி 1 ரூபாய் அரிசி போலவும், இலவச வண்ணத் தொலைக்காட்சி போலவும் தமிழும் மலிவு பெறும்...
வாழ்த்துகள். இதழை வாசிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ReplyDelete- பொன்.வாசுதேவன்