Monday, October 5, 2009

தமிழ்ச்சூழலில் சிறுபத்திரிக்கைகளுக்கான வெளி என்பது தீர்க்கமற்றதாய் இருந்து வருகிறது. காலத்திற்கு ஏற்றதான வெளிப்பாடு என்பது அறவே இல்லை. இத்தகைய நிலையில் தான் இந்த இதழை தொடங்க வேண்டியுள்ளது. அதே போல் இதழ் முழுவதும் நான் வியாபித்திருக்கும் நிலையும் துரதிருஷ்டவசமாக ஏற்பட்டுள்ளது. உரிய படைப்புகளுக்காக 4 மாதங்களுக்கு மேல் காத்திருந்துவிட்டு நானே சில கட்டுரைகளை எழுதினேன். இத்தகைய சூழலில் உயரிய படைப்பாளிகள் மற்றும் சிந்தனையாளர்களுக்கான பஞ்சம் தமிழில் அருகி வருவதை கூர்ந்து கவனித்து வரும் நான் நன்றாகவே உணர்ந்துள்ளேன். சிறு பத்திரிக்கைகளுக்கென்று ஓர் அரசியல் உண்டு. அந்த அரசியல்தான் எழுத்தின் போக்கை எதிர்காலத்திற்கு வித்திடுவது. புறவுலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அதனால் அகம் சார்ந்து ஏற்படும் விளைவுகள், உலகமயமாதல் குறித்த சந்தேகங்கள், நியாயப்பாடுகள். இன்றைய பொருளாதார சிக்கல்கள், மொழியியல் ஆகியவை குறித்து வரும் இதழ்களில் விரிவாக அலசி ஆராயப்படும்.  உலகளாவிய படைப்பாக்கம், அரசியல் மற்றும் ஊடகங்கள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் குறித்தும், கடந்த மற்றும் நிகழ்கால சிந்தனைப் போக்குகள் குறித்தும் உரிய எழுத்தாக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த இதழை வாசகர்களாகிய உங்களிடம் ஒப்படைக்கிறேன். இதன் சாதக பாதகங்களை உரிய விமர்சனங்களாக ஒப்படையுங்கள். ஆனால் செம்மையான படைப்புகள் மற்றும் உருப்படியான கட்டுரைகள் மட்டுமே இதழில் பிரசுரம் செய்யப்படும் என்பதை உறுதியுடன் கூற விரும்புகிறேன். மந்திரச்சிமிழ் இதழில் நவநவீன சிந்தனைகள் , மாற்று மற்றும் நுண்ணரசியல், மாற்று ஊடகம்(உலகளாவிய), நேர்கோடற்ற படைப்பாக்கம் ஆகியவையே முதன்மையாக கொள்ளப்படும் என்பதனையும் தெளிவாக்க விரும்புகிறேன். காலாவதியான பிம்பங்களுக்கும், பெரும் கதையாடல்களுக்கும் இங்கே சிறிதும் இடமில்லை என்பதை  உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறேன். படைப்புகள் மற்றும் கட்டுரைகள் கிடைக்கப்பெறாததற்கு இதுவும் ஒரு காரணமே. அப்படி ஒரு நிலை தொடர்ந்து ஏற்பட்டால், அதனால்  எக்காரணத்தைக் கொண்டும் இதழ் நிறுத்தப்பட மாட்டாது. இதழின் அரசியலைக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் கொண்டோ அல்லது நானோ இதழை நிரப்புவோம் என்று கூறிக் கொள்கிறேன். சமகால பிரச்சனைகள் விருப்புவெறுப்பின்றி பிரசுரிக்கப்படும் என்பதையும் கூற விரும்புகிறேன்.


- பதிப்பாசிரியர்
இதழின் உள்ளடக்கம்

பிராந்தியவாதம்: தேசியத்தின் இரட்டைமுகம்-செல்வ புவியரசன்                4


உலகமயமாதலும் அதன் இயலாமையும்-க.செண்பகநாதன்                    9
வெண்ணிறம் கொண்ட கரும்பறவை- ஆல்பெரட் டி முஸோட்(தமிழில்:க. செண்பகநாதன்                    13

ஷியாம் பெனகல் - மாற்று சினிமாவுக்கான இந்திய முகம்-                                   க. செண்பகநாதன்        30
பருவ காலங்களுடன் ஊடாடும் வாழ்வின் சரிதம்- க. செண்பகநாதன்                44

பின்காலனிய நாடகங்கள்:
ஏர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கன்டயரை முன்வைத்து    -தமிழச்சி தங்க பாண்டியன்        50

திருச்சாரணத்து மலைக் கோயில்    -ப. சோழநாடன்                    55

No comments:

Post a Comment